வாரவிடுமுறை, முகூர்த்தநாளையொட்டி பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

வாரவிடுமுறை, முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-04 18:09 GMT

கார்த்திகை திருவிழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 30-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதனால் வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

இதேபோல் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதாலும் வெளியூர், வெளிமாநில அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அலைமோதிய பக்தர்கள்

இந்நிலையில் இன்று  வார விடுமுறை மற்றும் முகூர்த்தநாள் என்பதால் பழனியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இதனால் கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

2 மணி நேரம்

குறிப்பாக ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. இதேபோல் நுழைவு பகுதியான பாதவிநாயகர் கோவில், தரிசன வழிகள் மற்றும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் நேற்று காலை முதலே பழனியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மேலும் மதிய வேளையில் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்