கிரிவலம் வரும் பக்தர்கள் நெகிழிப்பைகளை தவிர்க்க அறிவுறுத்தல்

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் நெகிழிப்பைகளை தவிர்க்க வேண்டும் என பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார்.

Update: 2023-08-28 12:50 GMT

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் நெகிழிப்பைகளை தவிர்க்க வேண்டும் என பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார்.

பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள்

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆவணி மாத பவுர்ணமி நாளை (புதன்கிழமை) காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.05 மணிக்கு நிறைவடைகின்றது. பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை உயர் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவிலில் பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் இலவசமாக சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையினர் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு பக்தர்கள் வரிசையில் செல்ல முனைப்புடன் பணியாற்ற வேண்டும். மருத்துவ துறையினர் கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். 108 ஆம்புலன்சுகளை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

அடிப்படை வசதிகள்

கிரிவலப்பாதையை நகராட்சி துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

நகராட்சியுடன் நெடுஞ்சாலைத் துறை இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். போக்குவரத்து துறையின் சார்பில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதிகளை அமைத்து தர வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்குகின்றதா என்பதை காவல் துறையின் மூலமாக கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள், பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை (பிளாஸ்டிக்) தவிர்த்து துணிப்பை எடுத்து வர அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனம் உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்