நம்பெருமாள் ஸ்ரீரங்கம் திரும்பிய நாளை கொண்டாடிய பக்தர்கள்

48 ஆண்டுகளுக்கு பிறகு நம்பெருமாள் ஸ்ரீரங்கம் திரும்பிய நாளை பக்தர்கள் கொண்டாடினர்.

Update: 2023-05-31 19:33 GMT

கி.பி. 1,311-ம் ஆண்டில் டெல்லியை ஆட்சி செய்து வந்த மாற்று மதத்தினர் இந்தியா முழுவதும் படையெடுத்து கோவில்களை தாக்குவது, பொக்கிஷங்களை கொள்ளையடிப்பது, சிற்பங்களை சிதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், கி.பி. 1,323-ம் ஆண்டு டெல்லியை ஆட்சி செய்த மாற்று மதத்தினர் ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆச்சாரியர்கள், அடியார்கள் ஸ்ரீரங்கம் கோவிலையும், கோவில் சொத்துகளையும் பாதுகாக்க முடிவு செய்தனர். அப்போது ஸ்ரீரங்கத்தில் பிள்ளை லோகாச்சாரியார் என்ற வைணவ அடியார் மூலவர் ரெங்கநாத பெருமாள், ரெங்கநாயகி தாயாரை சுவர் எழுப்பி மறைத்தார். மேலும் உற்சவமூர்த்தியான அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி சிலரின் துணையுடன் காவிரி ஆற்றின் வழியாக தெற்கு நோக்கி அழகர் கோவில், கோழிக்கோடு, திருநாராயணபுரம், திருப்பதி, கர்நாடகா என ஊர் ஊராக சுற்றி ஆங்காங்கே அழகிய மணவாளனுக்கு பூஜைகள் செய்து வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் மாற்று மதத்தினர் அச்சம் நீங்கிய நிலையில் அழகிய மணவாளன் 48 ஆண்டுகள் கழித்து வைகாசி 17-ம் நாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். அவர்தான் நம்பெருமாள் எனக்கூறி அனைவரும் வழிபாடு செய்தனர். அழகிய மணவாளன் நம்பெருமாளாக ஸ்ரீரங்கம் திரும்பி வந்த இந்த நாளை (வைகாசி 17-ம் நாள்) கொண்டாடும் வகையில் திருக்கோவில் திருமடங்கள் சார்பில் ஸ்ரீரங்கம் பெரிய நம்பிகள் மற்றும் ஆச்சாரியார்கள் தலைமையில் ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பிருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான அரங்கன் அடியார்கள் பெருமாள் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்