தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 கோவில்களில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் மீது சாட்டையால் அடித்து பூசாரி ஆசி வழங்கினார்.
ஆடித்திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஜி.குரும்பப்பட்டியில் மகாலட்சுமி அம்மன், கருப்பசாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவையொட்டி மகாலட்சுமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் மகாலட்சுமி அம்மனின் உற்சவ சிலை மற்றும் ஆணி அடித்த காலணியை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
தலையில் தேங்காய் உடைப்பு
விழாவையொட்டி விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பு அமர்ந்தனர். அதன்பின்னர் கோவில் பூசாரி லோகநாதன் ஆணி அடித்த காலணியை அணிந்து கொண்டு பக்தர்களை சுற்றி நடந்து வந்தார்.
பின்பு அம்மனை வழிபாடு செய்து பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். அதன்பின்னர் பக்தர்கள் மீது சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பூசாரியிடம் சாட்டையடி பெற்ற பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபாடு செய்தனர்.
சாணார்பட்டி
இதேபோல் சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியை அடுத்த கே.ஆண்டியபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில், பூசாரி கையில் தீப்பந்தத்துடன் 'கோவிந்தா, கோவிந்தா' என்று கூறியபடி வந்தார். கோவில் முன்பு அமர்ந்து இருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காயை உடைத்தார். அப்போது பெண் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து குலவையிட்டனர்.
இதில் ஆண்டியபட்டி, கம்பிளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) அம்மன் மஞ்சள்நீராடி, முளைப்பாரி ஊர்வலத்துடன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
இடையக்கோட்டை
ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே வலையப்பட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவிலில் பூசாரி பூச்சப்பன் அருள் வந்து ஆடினார். பின்னர் கட்டையால் ஆன ஆணி காலணியை பூசாரி அணிந்துகொண்டு கோவில் முன்பு அமர்ந்து இருந்த பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்தார்.
இதையடுத்து தரையில் படுத்து இருந்த பெண் பக்தர்கள் மீது பூசாரி சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். விழாவில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர், கோவை, திருப்பூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செந்துறை
நத்தம் அருகே செந்துறை குரும்பப்பட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வீதிஉலா வந்தார்.
இதைத்தொடர்ந்து கோவில் முன்பு அமர்ந்து இருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். அதன்பின்னர் சாட்டையால் பக்தர்கள் மீது அடித்து பூசாரி ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வத்தலக்குண்டு அருகே அழகாபுரியில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காயை உடைத்தார். பின்னர் அம்மன் மின் ரதத்தில் வீதி உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.