பக்தர்கள் பால்குட ஊர்வலம்
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு கோத்தகிரி டானிங்டன் மகாசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பெண்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் கைகளில் பால்குடங்கள் மற்றும் அக்கினி சட்டிகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 11 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு பொதுமக்களை கவரும் வகையில் திருப்பூர் கும்மியாட்ட குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) அபிஷேக அலங்கார பூஜை, அன்னதானம், அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.