சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

Update: 2023-04-04 19:12 GMT

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பொங்கலிட்டும், சாஸ்தாவுக்கு மாலைசாத்தி அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

தொடர்ந்து இரவு 12 மணிக்கு கருப்பசாமி, சுடலைமாட சுவாமி, உதிரமாடசாமி, அக்னிமாடசாமி, சங்கிலி மாடசாமி, தளவாய் மாடசாமி, கரடி மாடசாமி, பேச்சி, பிரம்மசக்தி, மாடசாமி, பிணம் தின்னி கருநாகம் முண்டமாடசாமி, பரனடிமாடசாமி, முன்னடி மாடசாமி, முண்டசாமி, கொம்புமாடசாமி, சப்பாணி மாடசாமி, பட்டவராயன், லாடசன்னியாசி, புதியவன்சாமி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, படையல் பூஜை நடந்தது. ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்.

கரையடி மாடசாமி கோவில்

சேரன்மாதேவி அருகே பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் மற்றும் வீரியப்பெருமாள் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

காலையில் பால்குட ஊர்வலம், மதியம் கும்பாபிஷேகம், சாஸ்தா மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சாஸ்தா கோவில்கள்

இதேபோன்று அம்பை அருகே உள்ள மெய்யப்ப சாஸ்தா கோவில், கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், படப்பகுறிச்சி குளத்துப்புழை தர்மசாஸ்தா கோவில், மானூர் கீழப்பிள்ளையார்குளம் திருமேனி அய்யனார் சாஸ்தா கோவில், மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா கோவில், தென்திருப்பேரை கடம்பாகுளம் கரையில் உள்ள பூலுடையார் சாஸ்தா கோவில், நிறைகுளத்து சாஸ்தா, முருகுவுடையார் சாஸ்தா கோவில், டவுன் தடிவீரன் சாஸ்தா, மேகலிங்க சாஸ்தா, பாளையங்கோட்டை இலங்காமணி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் அதிகாலையில் இருந்து பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு மற்றும் பொங்கலிடுதல், படையல் பூஜை போடுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

சொரிமுத்து அய்யனார் கோவில்

இதேபோல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று காலை முதலே கார், வேன், இருசக்கர வாகனங்கள், சிறப்பு பஸ்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள ஆற்றில் புனித நீராடி, பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

மேலும் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன், பேச்சியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார ேதவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்