பக்தர்கள் உடலில் மஞ்சள்-சேற்றை பூசிக்கொண்டு வினோத வழிபாடு
விளாத்திகுளம் அருகே காளியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் தங்களது உடலில் மஞ்சள் மற்றும் சேற்றை பூசிக்கொண்டு வினோத வழிபாடு நடத்தினர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9-ம் திருவிழாவானா நேற்று பக்தர்கள் உடலில் மஞ்சள் மற்றும் சேற்றை பூசிக்கொண்டு வினோத வழிபாடு நடத்தினர். சேற்றை உடல் முழுவதும் பூசிக்கொண்டால் அதில் உள்ள நுண் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பக்தர்கள் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் அங்குள்ள பொது கண்மாயில் கூடினர். அங்கு அவர்கள் தங்களது உடலில் மஞ்சள் மற்றும் சேற்றை பூசிக்கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர்.
அப்போது அங்கு பெண்கள் பலர் சிறிய குடங்களில் வேப்பிலையுடன் மஞ்சள்நீர் கொண்டு வந்தனர். சேற்றை பூசிய பக்தர்கள் தங்களது உடலில் அந்த மஞ்சள் நீைர ஊற்றினர். தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.