சேலம் ரெயில் நிலையத்தில்ரூ.45 கோடியில் மேம்பாட்டு பணிகோட்ட மேலாளர் தகவல்
சூரமங்கலம்
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் சேலம் ரெயில் நிலையத்தில் ரூ.45 கோடியில் மேம்பாட்டு பணி நடக்கிறது என்று கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா கூறினார்.
பிரதமர் மோடி
அம்ரித் பாரத் ெரயில் நிலைய திட்டத்தில் நாடு முழுவதிலும் 508 ெரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளுக்கு காணொலி மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டி வைக்கிறார். இதில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர் ரெயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் ெரயில்வே கோட்டத்தில் சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 15 ெரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரூ.272 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி சேலம், திருப்பூர், போத்தனூர் மற்றும் கரூர் ரெயில் நிலையங்களில் நடைபெற உள்ள பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
ரூ.45 கோடியில்...
சேலம் ரெயில் நிலையம் ரூ.45 கோடியிலும், கரூர் ரெயில் நிலையம் ரூ.34 கோடியிலும், திருப்பூரில் ரூ.22 கோடியிலும், போத்தனூர் ரெயில் நிலையத்தில் ரூ.24 கோடியிலும் மேம்படுத்தப்பட உள்ளன. நான்கு ரயில் நிலையங்களும் ரூ.125 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டங்களின் கீழ் ெரயில் நிலையங்களின் முகப்பு பகுதி மேம்படுத்தப்படும். ெரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள், நுழைவு பகுதி, காத்திருப்போர் அறை, பயணச்சீட்டு அலுவலகம், கழிப்பறைகள் தரம் உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. முதற்கட்ட பணிகள் அடுத்த 6 மாத காலத்தில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் முன்னிலையில் ஆய்வு
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வழியில் ரெயில் தண்டவாள பாதை ரூ.15 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. வனப்பகுதியில் யானைகள் ெரயில் வழிப்பாதையை பாதுகாப்பாக கடக்கும் வகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை அளித்துள்ள பரிந்துரையை ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் ரெயில் நிலையத்தின் 2-வது நுழைவுவாயில் பகுதி மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் சேலம் ரெயில் நிலையத்தில் பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பி.சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, முதுநிலை இயக்க மேலாளர் அனித் பிரகாஷ், முதுநிலை கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு) கார்த்திகேயன், முதன்மை திட்ட மேலாளர் அனில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.