பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பள்ளி அளவில் நடந்த போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
நாகர்கோவில்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பள்ளி அளவில் நடந்த போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
முதல்-அமைச்சர் கோப்பை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் குமரி மாவட்ட பிரிவின் கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், 15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. அனைத்து பிரிவுகளிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.
கபடி விளையாடிய துணை மேயர்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நேற்று நடந்தன. இதில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா கலந்து கொண்டு மாணவிகளுடன் கபடி விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தடகள போட்டிகள், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்கள் விவரம்
100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஞானதீபம் பள்ளி மாணவா் விசோக் முதலிடத்தை பிடித்தார். 200 மீட்டர் ஓட்ட போட்டியில் முதல் பரிசை கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முகேசும், 400 மீட்டர் போட்டியில் முதல் இடத்தை கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சுகேசும், 800 மீட்டர் போட்டியில் முதல் இடத்தை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவர் ஆகாஷ், 1500 மீட்டர் போட்டியில் முளகுமூடு புனித ஜோசப் பள்ளி மாணவர் அஸ்வின் ஆகியோரும் வென்றனர்.
உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் இடத்தை முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் செரின், நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் நிதின், தட்டு எறிதலில் முதல் இடத்தை முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஜின், குண்டு எறிதலில் அன்னை நகர் அவர் லேடி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆம்லோனின் ஆகியோர் வென்றனர்.
கல்லூரி அளவில் போட்டி
கைப்பந்து போட்டியில் நாகர்கோவில் புனித அலோசியஸ் பள்ளி முதலிடம் பிடித்தது. இதேபோல கால்பந்து போட்டியில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், கபடி போட்டியில் கட்டைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும் வென்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) கல்லூரி மாணவர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது.