அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுயூ-டியூப் பார்த்து ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.86½ லட்சத்தை இழந்த பட்டதாரி பெண்:தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு யூ-டியூப் பார்த்து ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.86½ லட்சத்தை பட்டதாரி பெண் இழந்தது தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-24 18:45 GMT


ஆன்லைன் வர்த்தகம்

ராமநாதபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி ரூபா (வயது 28). இளங்கலை பட்டதாரி. இவர், தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் உத்தமபாளையம் போலீஸ் குடியிருப்பில் உள்ள எனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தெரிந்த சிலர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிப்பதாக அறிந்தேன். இதனால், நானும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்க விரும்பினேன். இதற்காக யூ-டியூப் சமூக வலைத்தளத்தில் இதுதொடர்பான வீடியோக்களை பார்த்தேன்.

அதில் இடம்பெற்ற 3 செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பணத்தை முதலீடு செய்தேன். அந்த 3 செயலிகளிலும் பல்வேறு தவணைகளில் முதலீடு செய்தேன். அந்த வகையில் மொத்தம் ரூ.91 லட்சத்து 61 ஆயிரத்து 821-யை முதலீடு செய்தேன். அதற்கு சில காலம் லாப தொகையும் கிடைத்து வந்தது. அந்த வகையில் முதலீடு செய்த தொகையில் ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 542 திரும்ப கிடைத்தது.

ரூ.86½ லட்சம் மோசடி

மீதம் ரூ.86 லட்சத்து 62 ஆயிரத்து 279 திரும்ப கிடைக்கவில்லை. அதற்கான லாபத்தொகையும் கிடைக்கவில்லை. அதன்பிறகு விசாரித்தபோது, நான் முதலீடு செய்த 3 ஆன்லைன் செயலிகளும், இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாதவை என்று தெரியவந்தது.

மேலும் முதலீடு செய்த பணத்துக்கு லாபம் கொடுப்பது போல் ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததும் தெரிந்தது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பணத்தை முதலீடு செய்ய பயன்படுத்திய செல்போன் செயலிகள், அவை தொடர்புடைய இணையதள முகவரிகள் மற்றும் இணையவழியில் பணத்தை அனுப்பிய பல்வேறு யு.பி.ஐ. முகவரிகள் ஆகியவற்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்