'மினி' செயற்கைகோள் வடிவமைத்தஅரசு பள்ளி மாணவர்கள்:கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு
மினி செயற்கை கோளை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்களை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
செயற்கைகோள்
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியவை சார்பில் பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 150 மிகச்சிறிய ரக 'பீகோ' செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பது, செயற்கை கோள் வடிவமைப்பது தொடர்பான திட்டத்தில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் தேர்வு நடந்தது.
இதில், தேனி அருகே ஸ்ரீரெங்கபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கனிஷ்கர், மனோஜ், அமர்நாத், மனோபாலா, விக்னேஷ், ரோகித், வசந்தகிருஷ்ணா, அருண்குமார் ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதுபோன்று அறிவியல் ஆர்வம் கொண்ட மேலும் சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு 3 நாட்கள் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பாராட்டு
பின்னர், கோவையில் கடந்த 10-ந்தேதி பயிற்சிப்பட்டறை நடந்தது. இதில் ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் பயிற்சி அளித்தனர். மிகச்சிறிய எடை கொண்ட செயற்கைகோள் வடிவமைத்தல், அதற்கான உதிரிபாகங்கள் தயாரித்தல், பரிசோதனை கனசதுரம் மூலம் மென்பொருள் சிப்களை இணைத்தல் ஆகிய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், இந்த மாணவர்கள் குழுவினர் பீகோ எஸ்.ஆர்.ஜி. கனிஷ்கா என்ற பெயரில் மிகச்சிறிய அளவில் செயற்கை கோள் வடிவமைத்து கொடுத்தனர். அவை கணினி மூலம் பரிசோதித்து வெற்றியும் பெற்றது.
இந்த செயற்கை கோள், மற்ற மாணவர்கள் வடிவமைக்கும் செயற்கை கோளுடன் இணைத்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்று செயற்கை கோள் வடிவமைத்த மாணவர்கள் குழுவினரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிவண்ணன், பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) மலர்விழி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவர்களை பயிற்சிக்கு அழைத்துச் சென்று வழிகாட்டிய பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் உஸ்மான்அலிக்கும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.