டாஸ்மாக் அதிகாரி உள்ளிட்டவர்கள் மீதான வழக்கை துணை சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும்

டாஸ்மாக் அதிகாரிகள் மீது உள்ளூர் போலீசார் பதிவு செய்த வழக்கை துணை சூப்பிரண்டு விசாரித்து 2 மாதத்தில் முடிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-11 19:59 GMT

டாஸ்மாக் அதிகாரிகள் மீது உள்ளூர் போலீசார் பதிவு செய்த வழக்கை துணை சூப்பிரண்டு விசாரித்து 2 மாதத்தில் முடிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை திருமங்கலம் டவுன் டாஸ்மாக் மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறேன். மதுரையில் கடந்த 2013-ம் ஆண்டில் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக முருகேஸ்வரி, அவரது உதவியாளராக சரவணன் இருந்தனர். இவர்கள் டாஸ்மாக் ஊழியர்களை மோசமாக நடத்தினர். லஞ்சம் தராவிட்டால் பணியிடை நீக்கம், பணி நீக்கம் செய்வதாக ஊழியர்களை மிரட்டினர்.

டாஸ்மாக் கடையில் இருப்பு விவரங்களை நான் முறையாக அனுப்பாமல், டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு மற்றும் பற்றாக்குறை ஏற்படுத்தியதாக கூறி என்னை பணியிடை நீக்கம் செய்தனர். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதற்கிடையே என்னை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்று, பணியில் தொடர்ந்து வருகிறேன்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுங்கள்

இதுகுறித்து டாஸ்மாக் மேலாளர், அவரது உதவியாளர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் டாஸ்மாக் மேலாளர் பெயரை குறிப்பிடாமல் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை திருமங்கலம் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவி்ல் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் சதீஷ்பாபு ஆஜராகி, மனுதாரர் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் அவருக்கு பல்வேறு தொல்லைகளை எதிர்மனுதாரர்கள் அளித்து, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கை வேறு அமைப்பிற்கு மாற்றுவது மட்டுமே தீர்வு என வாதாடினார்.

துணை சூப்பிரண்டு விசாரிக்க உத்தரவு

விசாரணை முடிவில், இந்த வழக்கில் தென் மண்டல போலீஸ் டி.ஐ.ஜி.யையும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் மனுதாரர் வழக்கை வேறு விசாரணை அமைப்பை சேர்ந்த துணை சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த துணை சூப்பிரண்டு இந்த வழக்கு விசாரணையை 2 மாதத்தில் முடிக்க வேண்டும். அவரது விசாரணையை கண்காணிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்