பண்ருட்டி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் பலா விலை சரிவு விவசாயிகள் கவலை
பண்ருட்டி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் பலா விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி பலா
முக்கனிகளில் 2-வது இடம் வகிப்பது பலா. இந்த பலாவுக்கு பெயர்பெற்றது பண்ருட்டி. செம்மண் பூமியான இந்த பகுதியில் விளையும் பலா, தனிசுவையை கொண்டதாகும்.
அதனால் தான், இங்கிருந்து வரும் பலாவுக்கு மார்க்கெட்டில் எப்போதும் தனி இடம் உண்டு. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பண்ருட்டியில் பலா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
குறிப்பாக கடலூர் மாவட்டமின்றி சென்னை, சேலம், மதுரை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதிக விளைச்சல்
நடப்பு ஆண்டு, சீசனில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை மிகவும் சரிந்து உள்ளது. சிறிய அளவு பலாப்பழம் தற்போது 50 ரூபாயில் ரூ 150 வரை கிடைக்கிறது. பெரிய அளவிலான பழங்கள 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தில் விவசாயி ராமசாமி என்பவரது நிலத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயிரம் காய்ச்சி என்று அழைக்கப்படும் பலா மரத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவு பலா காய்த்துள்ளது.
இருமடங்கு சுவை
இது குறித்து ராமசாமி கூறுகையில், இந்த தோப்பு எங்களது பரம்பரை சொத்தாகும். எனது மூதாதையர்கள் நட்டு வைத்த ஒரே ஒரு பலா மரம் இன்றும் நிலைத்து நிற்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலையும் தாங்கி கொண்டு இன்றுவரை விளைச்சலை தந்து கொண்டு இருக்கிறது.
வழக்கமாக இந்த மரம் ஆயிரம் பிஞ்சுகளை விடும். அதில் 350 பிஞ்சுகளை மட்டுமே காயாக மாற விடுவோம். மற்றவைகளை துண்டித்து விடுவோம். ஏனெனில் எல்லா பிஞ்சுகளையும் விட்டால் பருமன் குறைந்து விடும் அதில் 350 பிஞ்சுகளை மட்டுமே காயாக மாற விடுவோம்.
இந்த மரத்தில் காய்க்கும் பழத்தின் சுவை, மற்றவைகளை விட இரு மடங்கு அதிக சுவை உடையதாகும். ஒரு பழம் 10 கிலோ முதல் 80 கிலோ எடை வரை இருக்கும்.
இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஞ்சு விட்டது. அதில் 350 பிஞ்சுகளை மட்டும் விட்டோம். மற்றவைகளை துண்டித்து விட்டோம். இதுவரை 350 பழங்களை அறுவடை செய்துள்ளோம் என்றார்.
விவசாயிகள் கவலை
ஆண்டுதோறும் ஆயிரம் பிஞ்சுகளை விடும் என்பதால், 'ஆயிரம் காய்ச்சி மரம்' என்று எங்கள் முன்னோர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஒற்றை மரத்தில் காய்க்கும் பலா ஆண்டும் தோறும் எங்களுக்கு போதிய வருமானத்தை தருகிறது.
ஆனால் இந்த ஆண்டு பலா விளைச்சல் அதிகமாக இருந்ததால் சரியான அளவிற்கு விலை போகவில்லை. இதனால் பலா விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையோடு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்ருட்டி மார்க்கெட்டிலும் பலா விற்பனை மிகவும் சரிந்து காணப்படுகிறது.