மாணவ-மாணவிகள் கல்வியை தொடர வைப்பு நிதி பத்திரங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் இன்மையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வியை தொடர தமிழ்நாடு அரசின் சார்பில் வைப்பு நிதி பத்திரங்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

Update: 2023-04-19 18:45 GMT

நிதி உதவி வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசின் சார்பில், வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அதனால் ஏற்படும் வருவாய் இன்மை காரணமாக அவர்களுடைய குழந்தைகள் பள்ளியில் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வியை இடையில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து கல்வியை கற்கும் வகையில் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வருவாய் இன்மை காரணமாக பாதிக்கப்படுகிற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான நிதி பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகை மற்றும் அதன் முதிர்வு தொகை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி செலவிற்காகவும், 21 வயதை அடையும் போது வழங்கப்பட்டு பராமரிப்பு செலவிற்காகவும் பயன்படுத்தப்படும்.

கலெக்டர் வழங்கினார்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தர்மபுரி தொடக்கக் கல்வி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிதி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு வைப்பு நிதி பத்திரங்கள் பெறப்பட்டன.

இதைதொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தி, 3 மாணவ மாணவிகளுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 10 மாணவ, மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரத்திற்கான வைப்பு நிதி பத்திரங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்