பொய் வழக்கு விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பொய் வழக்கு விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-28 20:55 GMT


பொய் வழக்கு விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பொய் வழக்கு

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர். என்னை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றனர். என் மீது லாட்டரி விற்பனை செய்ததாக ஏற்கனவே 17 வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டில் நான் போலீசார் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு என்னை பல்வேறு வகையில் துன்புறுத்தினார்கள். அதற்கு மறுத்ததால் நான் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக பொய் வழக்குபதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இது முற்றிலும் பொய் வழக்கு. எனவே என் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீது இன்ஸ்பெக்டர் பூமிநாதன் பொய் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. மனுதாரர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் பொய் வழக்கு பதிவு செய்திருந்தால், அதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மதுரை எஸ்.எஸ் காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீஸ்காரர்கள், மனுதாரர் மீது பொய் வழக்குபதிவு செய்து உள்ளனர் என கூறப்பட்டு இருந்தது.

துறை ரீதியான நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை 3 மாதத்தில் எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்