சமயபுரம் மாரியம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு

சமயபுரம் மாரியம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடந்தது.

Update: 2022-08-28 19:59 GMT

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். பக்தர்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை சுமந்து சென்றும், அக்னி சட்டி ஏந்தியும் கோவிலை வலம் வந்தும், கோவிலுக்கு முன்புறம் மற்றும் தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று மூலஸ்தான அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இந்நிலையில், நேற்று ஆவணி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவில் ஆஸ்தான மண்டபத்தில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் மணியக்காரர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்