கூடுதல் நகைகள் கேட்டு மனைவியை கழிப்பறைக்குள் பூட்டி வைத்த பல் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
பல் டாக்டர்
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). பல் டாக்டர். இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லீலாதேவி (30).
இவர் சேலம் அழகாபுரம் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் தனக்கும், பல் டாக்டர் சிவகுமாருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது என்னுடைய பெற்றோர் எனக்கு 50 பவுன் வரதட்சணையாக கொடுத்தனர். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கைது
கடந்த சில நாட்களாக என்னுடைய கணவர், கூடுதல் நகைகள் கேட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். சம்பவத்தன்று நகைகள் கேட்டு அடித்து என்னை வீட்டில் உள்ள கழிவறைக்குள் தள்ளி பூட்டி விட்டார். நான் சென்னையில் உள்ள எனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன்.
அவர்கள் வந்து என்னை மீட்டனர். என்னை அடித்து துன்புறுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.
அதன்பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல் டாக்டர் சிவகுமாரை கைது செய்தனர்.