கொடைக்கானலில் பல் மருத்துவ மாநில மாநாடு

இந்திய பல் மருத்துவ தமிழ்நாடு கிளை சார்பில் 35-வது மாநில மாநாடு கொடைக்கானலில் உள்ள கோடை இன்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று தொடங்கியது. சுற்றுலா அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-02 19:52 GMT

இந்திய பல் மருத்துவ தமிழ்நாடு கிளை சார்பில் 35-வது மாநில மாநாடு கொடைக்கானலில் உள்ள கோடை இன்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. மாநாட்டிற்கு இந்திய பல் மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை முன்னாள் மாநில தலைவர் ராஜசிகாமணி தலைமை தாங்கினார். மாநில தலைவர் உமாசங்கர், வருங்கால தலைவர் பேபிஜான், செயலாளர் கோகுல்ராஜ், பொன்விழா ஆண்டு தலைவர் பாஸ்கர், இந்திய பல் மருத்துவ சங்க தமிழ்நாடு அலுவலக தலைவர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் குருராஜ் வரவேற்றார். பின்னர் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொன்விழா மாநாட்டினை தொடங்கி வைத்தது சிறப்பானதாகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த ஏராளமான மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். சுற்றுலாவை மேம்படுத்த உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவ துறையில் லேசர் மருத்துவம் போன்ற பல்வேறு புதிய சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல் மருத்துவரின் கோரிக்கைகளான ஆயுள் காப்பீடு, மருத்துவமனை தொடங்க கடன் வசதி ஆகியவை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பு தலைவர் பிரதீப் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்