குளத்தில் குளிக்க பட்டியலின பெண்களுக்கு அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை அருகே குளத்தில் குளிக்க பட்டியலின பெண்களுக்கு அனுமதி மறுத்ததாக அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பொய் புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குளிக்க அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூத்தங்குடியை சேர்ந்த பட்டியலின பெண்கள் சிலர் கடந்த 1-ந் தேதி அப்பகுதியில் உள்ள வைராண்டி கண்மாய் எனும் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், முத்துராமன் ஆகிய 2 பேரும் இந்த குளத்தில் மீன் வளர்க்கிறோம். இதனால் இந்த குளத்தில் நீங்கள் எப்படி குளிக்கலாம் என தகாத வார்த்தைகளால் திட்டி, குளிக்க கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நாகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அய்யப்பன், முத்துராமன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இந்த நிலையில் மஞ்சக்கரை வயராண்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும், மற்றொரு தரப்பினரும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் மேற்கண்ட பிரச்சினையில் அய்யப்பன், முத்துராமன் மீது பொய் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். உண்மை என்னவென்று அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்து மனு அளித்தனர். மேலும் குளத்தில் மீன் ஏலம் எடுத்த நிலையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த குளத்தில் மீன் பிடித்ததாகவும், இதனை தட்டிக்கேட்டதால் பொய்யாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளித்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
தொடரும் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. சமீபத்தில் இறையூரில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது. மற்றொரு கிராமத்தில் புத்தாண்டு கொண்டாட விடாமல் தடுத்தது தொடர்பாகவும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அறந்தாங்கி அருகே குளத்தில் பட்டியலின பெண்கள் குளிக்க அனுமதி மறுத்ததாக எழுந்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.