சாமிக்கு அர்ச்சனை செய்ய இருதரப்பினருக்கு அனுமதி மறுப்பு

இறச்சகுளத்தில் வாகன பவனியின் போது சாமிக்கு அர்ச்சனை செய்ய இருதரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-06 21:46 GMT

அழகியபாண்டியபுரம்:

இறச்சகுளத்தில் வாகன பவனியின் போது சாமிக்கு அர்ச்சனை செய்ய இருதரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமி வாகன பவனி

பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான எருக்கலுங்கவுடைய கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் வாகனத்தில் சாமி வீதி உலா வந்தது.

அர்ச்சனை செய்ய மறுப்பு

இந்தநிலையில் 5-வது நாள் திருவிழாவான நேற்று இரவு சாமி வாகன பவனி புறப்பட்டது. அப்போது இருதரப்பினர் அர்ச்சனை பொருட்களுடன் அந்த பகுதியில் சாமி தரிசனம் செய்ய தயாராக இருந்தனர்.இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலை மறியல்

மேலும் அவர்கள் அர்ச்சனை செய்யக்கூடாது என கூறி சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் உருவானது.

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் நள்ளிரவு வரை மறியல் நடந்தது. தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தப்பட்டது.

கண்டிக்கத்தக்கது

இதுகுறித்து இருதரப்பினரை சேர்ந்தவர்கள் கூறுகையில், வாகன பவனியின் போது சாமிக்கு அர்ச்சனை செய்ய எங்களுக்கு அனுமதி மறுத்து வருகிறார்கள். ஏற்கனவே இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். மேலும் கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு கொடுத்திருந்தோம். இந்தநிலையில் வாகன பவனியின் போது மீண்டும் சாமிக்கு அர்ச்சனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றனர்.

இந்த பிரச்சினையையொட்டி அங்கு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக கூடுதலாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்