முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வை கைவிடாவிட்டால், முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். செயலாளர் செல்மா பிரியதர்ஷன் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வை முழுமையாக கைவிட வேண்டும். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். அதன் பின்னரே பொது மாறுதல் கலந்தாய்வை அரசு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.