ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
காப்பீடு சேவை மீதான ஜி.எஸ்.டி.-யை நீக்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
காப்பீடு சேவை மீதான ஜி.எஸ்.டி.-யை நீக்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பாலிசிதாரர்களின் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். காப்பீடு சேவை மீதான ஜி.எஸ்.டி.-யை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கோவை கோட்ட பொருளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
வெளிநாடு பாலிசிதாரர்களுக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும். அனைத்து வித விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை சான்று தர வேண்டும். காலாவதியான 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பாலிசிதாரர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பலமுறை கே.ஒய்.சி.-க்காக ஆவணங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும்.
நீக்க வேண்டும்
ஒரே இடத்தில் பாலிசி அச்சடிப்பது மற்றும் அனுப்புவதை நிறுத்த வேண்டும். பழைய முறையையே பின்பற்ற வேண்டும். பாலிசி மற்றும் இதர பாலிசி சேவை மீதான ஜி.எஸ்.டி.-யை நீக்க வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும்.
முகவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் தர வேண்டும். முகவர் நல நிதி அமைக்க வேண்டும். முகவர்களை தொழில்முறை முகவர்களாக அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி தலைவர் சண்முகன், கோத்தகிரி தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் நடராஜ், ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கலெக்டர் அம்ரித்திடம் வழங்கினர்.