இந்து எழுச்சி முன்னணியினர் குடை பிடித்து நூதன ஆர்ப்பாட்டம்
தேனியில் இந்து எழுச்சி முன்னணியினர் குடை பிடித்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்த நிழற்குடை அகற்றப்பட்டது. தேனி ராஜவாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டதால் வாய்க்கால் ஆக்கிரமிப்பின் ஒரு அங்கமாக இருந்த நிழற்குடை அகற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்க வலியுறுத்தி தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, மக்கள் வெயிலில் காய்வதோடு, மழை வந்தால் நனையும் நிலை ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டும் வகையில் கையில் குடை பிடித்தபடி நூதன முறையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பயணிகளுக்கு நிழற்குடை அமைக்க வலியுறுத்தியும், பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இந்து எழுச்சி முன்னணியினர் கோஷங்கள் எழுப்பினர்.