மாற்றுத்திறனாளிகள் சங்க பிரமுகரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் சங்க பிரமுகரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வயலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 38). இவர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை வேப்பூரில் நடைபெற்ற மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேப்பூர் பஸ் நிலையத்துக்கு வந்து காத்திருந்தார். அப்போது மது போதையில் வந்த ஒருவர் ராஜசேகரை கொடூரமாக தாக்கி விட்டு சென்றாா். இதில் படுகாயமடைந்த ராஜசேகர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத குன்னம் போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் மாற்றுத்திறனாளி ராஜசேகரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காத குன்னம் போலீசாரை கண்டித்தும், அந்த நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.