தனியார் ரெயில் இயக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் இயக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை, ஜூன்.15-
கோவையில் இருந்து சீரடிக்கு நேற்று முதல் தனியார் ரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் ரெயில்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூகநீதிக்கட்சி சார்பில் நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்த கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அவர் கூறும்போது, "ரெயிலை தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதால் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக கூடுதல் கட்டணம் கொடுத்து பொதுமக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரெயிலும், தண்டவாளமும், அதில் பணியாற்றும் ஊழியர்களும் ரெயில்வே துறையை சேர்ந்தவர்கள். ஆனால் ரெயில் டிக்கெட் மற்றும் பணம் வசூலிக்கும் பொறுப்பை மட்டும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
இதேபோல், கோவை மஸ்தூர் யூனியன் ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் ரெயில்நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் மஸ்தூர் யூனியனை சேர்ந்த ஏராளமானவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.