தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர், கிராம நிர்வாக அலுவலகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பன் உள்பட கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு படுகொலை சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சங்ககிரி
சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்டக்கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்ககிரி வட்டக்கிளை தலைவர் மணி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.
இதில், தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்த கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷம் எழுப்பினர்.
மேட்டூர்
இதேகோரிக்கையை வலியுறுத்தி மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேட்டூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் விஜயகுமார் தலைைம தாங்கினார்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.