கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஆற்காடு, சோளிங்கர், நெமிலி, அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-25 17:57 GMT

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆற்காடு வட்டக்கிளை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை படுகொலை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், தமிழக அரசு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டியும் பேசினார். முடிவில் வட்ட கிளை பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

சோளிங்கர்

சோளிங்கர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஷானு தலைமை தாங்கினார். கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சோளிங்கர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமநிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நெமிலி

நெமிலியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் டோமேசான் தலைமை தாங்கினார். சங்க தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். இதில் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அரக்கோணம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் லட்சுமி நாராயணன், வட்ட செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்