விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழனியில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் காவலப்பட்டி கிளை சார்பில், பழனி பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஊரக வேலை திட்ட பணி நாட்களை 150 நாளாக உயர்த்த வேண்டும், காவலப்பட்டியில் குடிநீர், பெண்களுக்கு கழிப்பிட வசதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், காவலப்பட்டி பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். முடிவில் பழனி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தனர்.