கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.
அப்போது 2021-ம் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்த படி 100 நாள் பணியை 150 நாளாக உயர்த்த வேண்டும். மண், மாடு பராமரிக்க, உணவு உற்பத்தியை பெருக்க 150 நாள் நிதியை உழவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்.
கிராமப்புற வேலை வாய்ப்புகளை பெருக்க கிராமப்புற கட்டுமான பணி டெண்டர்களை கிராம சபையிலேயே ஏற்று நடத்த வேண்டும்.
கிராமப்புற ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு கட்டுமான பணி வேலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். இதில் விவசாயிகள் சம்பத், பாண்டிதுரை, சிவக்குமார், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.