அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தற்போது தமிழக உயர்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கூறி அவர்கள் புதிய அரசாணை ரத்து செய்து பழைய அரசாணைகளின் படி உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 66 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்பு இது குறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நேர்முகத்தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் 2 ஆயிரத்து 391 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்ய குறிப்பாணை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசாணை வெளியிட்டு அதன் மூலம் சான்றிதழ்களும் சரிபார்க்கும் பணி முடிந்தது. இந்நிலையில் தற்போதைய அரசு புதிய அரசாணையை வெளியிட்டு பழைய அரசாணை ரத்து செய்தது கவுரவ விரிவுரையாளர்களை பாதிக்கும் செயலாகும். ஆகவே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.