விக்கிரவாண்டியில்ஓட்டுனர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விக்கிரவாண்டியில் ஓட்டுனர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விக்கிரவாண்டி,
தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம், பாதுகாப்பு பேரமைப்பு, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம், அகில இந்திய ஓட்டுனர்கள் சங்கம், அப்துல் கலாம் ஓட்டுனர்கள் நல சங்கங்கள் சார்பில் நேற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மாதம் 20-ந் தேதி மத்தியபிரதேசம் குவாலியரில் ஓட்டுனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வட்டார போக்குவரத்து அலுவலரை கண்டித்தும், மோட்டார் வாகன சட்டத்திருத்தம் செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது வாகனங்களில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அனைத்து ஓட்டுநர் நல சங்கங்களின் தலைவர்கள் குமார், கோபால், கவியரசன், ஜெயசங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் வீரமணி, மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், பொருளாளர் பாஸ்கர், செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன், பத்மராஜ், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.