காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் பொய் குற்றச்சாட்டை கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்தும், டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்ததாக கூறி அதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ''திட்டமிட்டு ராகுல்காந்தி மீது பழி சுமத்தி அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால், அவர் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளார். எனவே உடனடியாக அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் அறப்போராட்டம், மக்கள் போராட்டமாக வெடிக்கும்'' என்றார். ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், துணைத்தலைவர்கள் வெள்ளை பாண்டியன், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.