காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல் குமரி மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், நகர தலைவர் ஹனுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.
ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்த கொண்டு பேசினர். இதில் காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ஜாண் இக்னேசியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மீனவரணி மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன் மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ஜோஸ்லால் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
திங்கள்சந்தை
குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் திங்கள் சந்தையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டைசன் தலைமை தாங்கினார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திங்கள்சந்தை பேரூராட்சி தலைவர் சுமன், விவசாய பிரிவு தலைவர் ஜாண் சவுந்தர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜீவா, ஜெமினேஷ், வினோஜன், ராபர்ட் கிளைவ், ஜிபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.