அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. காந்திமார்க்கெட் பகுதி கழகம் சார்பில், மின்கட்டண உயர்வை கண்டித்து அரிக்கேன் விளக்கு ஏந்தி கமான்வளைவு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் துணை மேயரும், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளருமான சீனிவாசன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சதுருதீன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ் உள்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியபடி மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன் பேசுகையில், "மின் கட்டண உயர்வு சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இது மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாதா மாதம் மின் கட்டணமும், ஆண்டுக்கு ஆண்டு வரியும் உயர்ந்து கொண்டேதான் இருக்கும். இதன் காரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும். அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று 40 தொகுதிகளையும் கைப்பற்றும். தி.மு.க. அரசு பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினர். ஆனால் இதுவரை அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை" என்றார்.
இதேபோல் திருவெறும்பூர், முசிறி, லால்குடியில் அ.தி.மு.க.சார்பில் பால், மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.