மலைக்கோட்டை:
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் அரசு கொறடா மனோகரன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அவைத்தலைவர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் மாவட்ட துணை செயலாளர் வனிதா, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துகுமார், பகுதி செயலாளர்கள் பூபதி, சுரேஷ்குப்தா, கவுன்சிலர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் பேசியதாவது:-
களப்பணியாற்றும் இயக்கம்
தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம், கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. தமிழக அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி கண்டன பேரணி நடத்தினார். இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காக களப்பணியாற்றும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான்.
சென்னை, திருச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஆதாருடன் இணைக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களை காட்டி மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாதாரண விஷயத்தைக்கூட இந்த அரசு செயல்படுத்த தவறிவிட்டது.
மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்து?
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளை தொடங்கினார். தி.மு.க. ஆட்சியிலோ 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகக்கூடிய நிலைமை உள்ளது. இதுபோன்ற நிலை மாற வேண்டும் என்று சொன்னால் மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீரங்கம்
இதேபோல் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் ஸ்ரீரங்கம் பஸ் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பொன்.செல்வராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
லால்குடி
லால்குடி ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கி பேசினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோகன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் அருணகிரி, லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், ராஜாராம், லால்குடி நகராட்சி கவுன்சிலர்கள் ராஜம் காத்தான், மருதமலையான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.