மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கறம்பக்குடி வட்டார தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் ஆகியவற்றின் சார்பில் மணிப்பூரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரியும், பழங்குடி இன பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமையை கண்டித்தும், மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ ஒன்றிய அமைப்பாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வீரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பொன்னமராவதியில் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பழனியப்பன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, சி.ஐ.டி.யூ. தலைவர் சாத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.