விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வையும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சரோஜா, மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திருச்செங்கோடு பொன் சரஸ்வதி, நாமக்கல் பாஸ்கர், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தா்.
பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி நடத்திவரும் தி.மு.க. அரசால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. விலைவாசி, காய்கறிகள் அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது விலைவாசி உயர்ந்தபோது அவற்றை கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினோம்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினார். மக்களை பாதிக்காதவாறு உதய் மின் திட்டத்தில் மாநில அரசை இணைத்து மின் கட்டணத்தை உயர்த்தாமல் அ.தி.மு.க. அரசு பார்த்துக் கொண்டது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அன்று இதற்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆனால் இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
40-க்கு 40 தொகுதி
2021 சட்டமன்ற தேர்தலில்தான் மக்கள் ஏமாந்து விட்டார்கள். அதன் காரணமாக வீட்டு வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்ந்து விசைத்தறி தொழில், லாரி தொழில்கள் முடங்கி விட்டன. ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டணம் உயர்கிறது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றும். அ.தி.மு.க. அழுத்தத்தின் காரணமாகவும், நாடாளுமன்ற தேர்தலை முன் நிறுத்தியும் தி.மு.க. அரசு பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1,000 வழங்க உள்ளது. அதிலும் பல்வேறு கட்டுபாடுகள் விதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு நகர செயலாளர் அங்கமுத்து வரவேற்றார். அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்லப்பன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் ராமலிங்கம், நகர அம்மா பேரவை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர்கள் மோகன், ராஜன், மல்லசமுத்திரம் பேரூராட்சி செயலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட மகளிர் அணி சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.