மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரியும், மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட தலைவி மீனா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் வெண்மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமசாமி மற்றும் வன வேங்கைகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, தமிழக மக்கள் விடுதலை கட்சி, மலைவாழ் மக்கள் இயக்கம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மணிப்பூரில் பழங்குடி பெண்களை வன்கொடுமை செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியை கலைக்க வேண்டும். கலவரத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதுபோல், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியினரும் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.