இந்தி திணிப்பு, பொது நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சேலம் கோட்டை பகுதியில் பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மேயர் ராமச்சந்திரன், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன், மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மாணவரணி நிர்வாகி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிச்சயம் வெல்லும்
இதில் தி.மு.க. மாநில செய்தி தொடர்பாளர்கள் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு பேசும் போது, 'ஒவ்வொரு முறையும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் ஏற்படும் போது ஒரு தலைவர் உருவாகுவார். பெரியார், அண்ணா, கருணாநிதியை தொடர்ந்து தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாகி உள்ளார். இவர் இந்தியாவிலேயே இந்தி திணிப்புக்கு எதிராக முதலில் குரல் கொடுத்து போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த போராட்டம் நிச்சயம் வெல்லும்' என்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் ரேகா பிரியதர்ஷினி, பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டி மலர்விழி ராஜா, அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி, ஒன்றிய குழு முன்னாள் தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.