சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்துகிருஷ்ணகிரியில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்பு

Update: 2023-05-30 04:30 GMT

கிருஷ்ணகிரி

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடந்து வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ராஜினாமா செய்ய வேண்டும்

அப்போது கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசே காவல்துறையை கையில் எடுத்துக் கொண்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி உள்ளது. கள்ளச்சாராயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலர் இறந்துள்ளனர்.

தஞ்சாவூரில் போலி மதுபானங்களால் பலர் கண் பார்வை இழந்துள்ளனர். தூத்துக்குடியில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அங்கீகாரம் ரத்து

தொடர்ந்து கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தர்மபுரி உள்பட 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. இதனால், 500 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவர். வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே தமிழகத்தில் தொழிற்சாலை வைத்திருக்கின்ற தொழில் முனைவோர்களை தான் சந்தித்து வருகிறார். எனவே புதிய தொழிற்சாலை வருவதற்கும் வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்திருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை. பிரதமர் மோடி கலை நயத்துடன் கட்டியுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைத்து பெருமைபடுத்தியுள்ளார். அவரை தமிழக மக்கள் பாரட்ட வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்