தி.மு.க. அரசை கண்டித்துஓசூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்தம்பிதுரை எம்.பி. பங்கேற்பு
ஓசூர்,
தி.மு.க. அரசை கண்டித்து ஓசூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து ஓசூரில் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மேலும், கள்ளச்சாராயத்தால், பல உயிர்களை பலி வாங்கியதாக, தி.மு.க. அரசை கண்டித்தும், சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், மாவட்ட துணை செயலாளர் கே.மதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், மஞ்சுநாத், கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சந்திரன், அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சிவராம், குபேரன், தில்ஷாத் முஜிபுர் ரகுமான், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கட்சியினர் கலந்துகொண்டனர்.
கண்டிக்கத்தக்கது
பின்னர், தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தமிழை பற்றியும், சோழர்களை பற்றியும் பேசிவிட்டு, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை, புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது. கரூரில் சோதனைக்கு வந்த அதிகாரிகளை, அடித்து உதைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. உதயசூரியன், அஸ்தமன சூரியனாகும் காலம் வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்த விடியா ஆட்சி விரைவில் அகன்று தமிழக மக்களுக்கு புதிய விடியல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.