வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பேரூராட்சியில் நேற்று தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் தூய்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கும் நிலையை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பேரூராட்சிக்கு இணையான வருமானம் உள்ள ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். பேரூராட்சிகளில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு 20 ஆண்டுகள் எந்தவித விபத்தும் இன்றி பணியாற்றியதற்கு அரசாணை அடிப்படையில் தங்கப் பதக்கம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி ஊழியர் சங்க துணைச்செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். பேரூராட்சி ஊழியர் சங்க அமைப்பாளர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொருளாளர் பால்முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். துணைத் தலைவர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் அமைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.