பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உத்தனப்பள்ளியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பா.ஜ.க. எஸ்.டி. அணி சார்பில் தமிழக அரசு விவசாய நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி நேற்று உத்தனப்பள்ளியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி. அணி மாநில செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். கட்சியின் மாநில துணை தலைவர் நரேந்திரன், எஸ்.டி. அணி மாநில தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.