பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்னும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட நிர்வாகி புகழேந்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
பாலக்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோரும், காரிமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட பொருளாளர் இளவேனில் உள்ளிட்ட நிர்வாகிகளும் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நல்லம்பள்ளி ஆகிய தாலுகா பகுதிகளிலும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி பணியிடங்கள்
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் ஆகியவற்றை தமிழக அரசு மீண்டும் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குபவர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்தவேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.