பாலக்கோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாலக்கோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலக்கோடு:
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிவரன்முறை செய்து இழப்பீடு வழங்கிட, நிலுவை ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பாலக்கோடு பேரூராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டார கிளை செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதற்கு மாவட்ட தலைவர் சுருளிநாதன், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சாம்ராஜ், ஊரக வளர்ச்சி துறை மாவட்ட தலைவர் சதிஷ் குமார், மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ருத்ரையன் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.