கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பையும் சேர்க்க கோரி ஊத்தங்கரையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-26 18:45 GMT

ஊத்தங்கரை

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பையும் சேர்க்க கோரி ஊத்தங்கரையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகள்

தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் ரொக்க பணம் ரூ.1,000 வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு தாங்கள் விளைவித்த செங்கரும்புகளை விற்பனை செய்ய வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கரும்பு சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தங்களுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படும் எனக்கூறி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை நான்கு ரோடு சந்திப்பில் பொங்கல் பரிசில் செங்கரும்பை சேர்க்க வலியுறுத்தி நேற்று கரும்பு விவசாயிகள் கைகளில் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, நகர செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுடன் செங்கரும்பை வழங்காவிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே அரசு விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பின்னர் விவசாயிகள் ஊர்வலமாக சென்று உதவி தாசில்தார் செந்திலிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்