அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சையத் முஸ்தபா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்களை தாமதமின்றி அரசு நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் ஆணையர் தலைமையில், ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தை சீரான இடைவெளியில் நடத்த வேண்டும். பணி ஓய்வு மறுக்கப்பட்டவர்களுக்கு, நீதிமன்ற தீர்ப்புகள் அரசாணைகளின்படி ஓய்வூதிய பயன்களை வழங்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியர்களின் மாவட்ட அளவிலான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் குப்புசாமி, பெரியசாமி, இனியன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.