தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க தர்மபுரி மாவட்ட பிரிவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் கவுரி தலைமை தாங்கினார். 30 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு இன்றி பணிபுரியும் சுகாதார செவிலியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். குடியிருக்க வசதி இல்லாத துணை சுகாதார மைய கட்டிடத்திற்கு பிடித்தம் செய்த வாடகை தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சிவகாமி, ஆனந்தி, செல்வி உள்பட ஏராளமான சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.