கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி சமூக சேவை சங்கம் சார்பில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள புதிய இருதய ஆண்டவர் பேராலயத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு செயலாளர் கோவேந்தன் முன்னிலை வகித்தார். தமிழக ஆயர் பேரவை எஸ்.சி.- எஸ்.டி. பணிக்குழுவின் மாநில பொருளாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். மறை மாவட்டத்தின் முதன்மை குரு அருள்ராஜ், கலையருவி மேய்ப்பு பணி மைய இயக்குனர் மரிய ஜோசப் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் மறை மாவட்ட குருக்கள், துறவியர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவின் செயலர் ஜேசுதாஸ் நன்றி கூறினார். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.