மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜி.எஸ்.டி.வரி விதிப்பு
மத்திய அரசு அரிசி, கோதுமை, பருப்பு, மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது விதிக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி தொலைபேசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயா, பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
நல்லம்பள்ளியில் ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இ்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, எல்லப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அரூர்-பாலக்கோடு
பாலக்கோடு பஸ்நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராசன், மாவட்டக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், காரிமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், மல்லிகா மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி
இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டியில் வட்ட செயலாளர் தனுஷன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு நிர்வாகிகள் வஞ்சி, சேகர், தீர்த்தகிரி, மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் வட்டக்குழு கண்ணகி, கிருஷ்ணவேணி, பழனிச்சாமி, மேகநாதன், கருணாகரன், சரவணன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.